கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய மேலும் சில இடங்களில் வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை நீடித்து வருகிறது.
அரசியல் காரணங்களுக்காக அவருக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
வெள்ளிக்கிழமையன்று காலை முதல் கரூரில் உள்ள நகைக்கடை உள்ளிட்ட சில இடங்களில் மீண்டும் சோதனை நடத்தினர். சனிக்கிழமை மாலை வரையிலும் சோதனை நீடித்தது என்றும் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புப் படையினரும் வந்திருந்தனர். அவர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்ட நிலையில், அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அண்மையில் கரூரைச் சேர்ந்த சிலரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சில அறைகள், அலுவலகப் பகுதிகளுக்கு மட்டும் அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர். அந்த இடங்களில் கடந்த இரு நாள்களாக அதிகாரிகள் மீண்டும் சோதனையிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் ஏழு மணியளவில் கரூர் ஜவஹர் சந்தையில் உள்ள பழனி முருகன் நகைக்கடையில் வருமான வரித் துறையினர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை அதிகாலை வரை சோதனை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக உள்ள சிலரது பண்ணை வீடுகளையும் அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை. மத்திய பாதுகாப்புப் படையினரின் துணையோடு மாயனூர் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தினர்.
சில இடங்களில் சோதனை நடவடிக்கையை உடனுக்குடன் முடிக்காமல், அவற்றுக்குச் சீல் வைக்கும் வருமான வரித்துறையினர் சில நாள்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்று சோதனையிடுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி அளிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில்தான் உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

