அரியலூர் அகழாய்வில் கிடைத்த சீனப் பானை ஓடு; அமைச்சர் மகிழ்ச்சி

அரியலூர் அகழாய்வில் கிடைத்த சீனப் பானை ஓடு; அமைச்சர் மகிழ்ச்சி

2 mins read
4a26a205-69ba-4a32-b967-db7da55a0420
மாளிகைமேடு பகுதியில் கிடைத்த சீன பானை ஓடு. - படம்: ஊடகம்

அரியலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நடந்து வரும் அகழாய்வின்போது சீன பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அகழாய்வுப்பணி தீவிரமடையும் என்றும் தமிழக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அரியலூரின் மாளிகைமேடு பகுதியில் தற்போது மூன்றாம்கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதில் பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. அவற்றுள் பழங்கால நாணய அச்சு, உடைந்த சீனப் பானை ஓடு ஆகியவை குறிப்பிடத்தக்கன.

இதன் மூலம் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே பண்டைக் காலத்தில் வணிகத்தொடர்புகள் இருந்தது உறுதியாகி உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மாளிகைமேடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் செங்கற்கல்லால் கட்டப்பட்ட வாய்க்கால் அமைப்பு கண்டறியப்பட்டது. 315 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த வாய்க்கால் எவ்வளவு தூரம் செல்கிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

அதற்கான நடவடிக்கைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ள நிலையில், சீன நாட்டைச் சேர்ந்தது எனக் கருதப்படும் உடைந்த பீங்கான் துண்டு, காசுகளை உருவாக்கப் பயன்படும் அச்சு, சுடுமண்ணால் ஆன முத்திரை ஆகியன கண்டெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

“பொது யுகத்திற்குப் பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில், தமிழ் நாட்டினுடனான சீன வணிகத் தொடர்புகள் குறித்து தெரியவந்துள்ளது.

“அதற்கான சான்றுகளாக தற்போது கிடைத்துள்ள பொருள்கள் அமைந்துள்ளன,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் மேலும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்