சாத்தூர்: கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியின்போது பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அங்கு சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
வெம்பக்கோட்டையிலுள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அப்போது 3,500க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இரண்டாம்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இம்முறையும் அரிய பொருள்கள் கிடைத்து வருவதாக ஆய்வாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
“இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றுள், கறுப்பு, சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,” என்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணிகளை பார்வையிட தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.