சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அவர் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை சந்தித்து பேசவுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கர்நாடக அரசு ஜூன் மாதம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை,” என்றார்.
“ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், ஆனால் 2.83 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. தண்ணீரை வழங்காததால் 6.357 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
“உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும்.
“தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்த வேண்டும். தமிழக விவசாயிகளின் நலனுக்காக டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்,” என்று அமைச்சர் துரைமுருகன் மேலும் தெரிவித்தார்.
“மேகதாது தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம்,” என்ற அவர், “நமக்கான உரிமையை நாம் கேட்கிறோம். மேகதாது அணை ஏன் கூடாது என்பதை காரணத்தோடு கர்நாடகாவிடம் விளக்குவோம்,” என்றும் தெரிவித்தார்.

