தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை: நீதிமன்றம் அதிரடி

2 mins read
74eb0bb9-4dfc-43a6-a518-9cd51e0f4bfc
பழனி நாடார் (இடது), செல்வ மோகன்தாஸ் - படங்கள்: ஊடகம்

சென்னை: கடந்த 2021ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் செல்வமோகன் தாஸ் பாண்டியன் களமிறங்கினார். கடும் போட்டி நிலவியதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். இதனால் அதிமுக வட்டாரங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இந்நிலையில், தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்.

தேர்தலில் பதிவான வாக்கு களுக்கும் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குகளுக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசமே உள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. சில வாக்குகள் எண்ணப்படாமலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று செல்வமோகன்தாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, அவற்றை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அடுத்த பத்து நாள்களில் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு தொடுத்த செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் ஆணையம் வழக்கு செலவாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்