புதுக்கோட்டை: கீழடி, பொற்பனைக்கோட்டை, சிவகளை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் முதன்முறையாக தங்க அணிகலன்களும் கீழடியில் தங்க அணிகலன், சுடுமண் காளை உட்பட 183 தொல்பொருள்களும் கிடைத்துள்ளன.
சங்ககால வாழ்விடப் பகுதியாக அறியப்படும் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறையினர் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 15 அடி நீள, அகலத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. அதில், ஒரு குழியில் 133 சென்டிமீட்டர் ஆழத்தில் இருந்து ஆறு இதழ்கள் கொண்ட தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழாய்வை வழிநடத்தி வரும் தொல்லியல்துறை இயக்குநர் தங்கதுரை தெரிவித்துள்ளார்.
மற்றொரு குழியில் இருந்து எலும்பு முனை கருவியும் வட்ட வடிவில், சிவப்பு நிறத்தில் கார்னீலியன் சூதுபவள மணியும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த அணிகலனை, மூக்குத்தி அல்லது தோடாக பயன்படுத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது. இது சங்க காலத்தின் வரலாறு, பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதுவரையிலான அகழாய்வில் இதுவே முதல் முறையாக கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணம்,” என்று தங்கதுரை கூறினார்.
எலும்பு முனை கருவியானது நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழாய்வு தொடங்கி சில நாள்களிலேயே 19 சென்டி மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானம் தென்பட்டதாகக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், துளையிடப்பட்ட மேற்கூரை ஓடுகள், பல வண்ணங்களில் பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல்கள் என ஏராளமான பொருள்கள் கிடைத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சிவகங்கை மாவட்டம், கீழடியில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண்ணால் செய்யப்பட்ட காளை உருவம், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பு ஆணிகள் என 183 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.