புதுடில்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பு அளித்த ஆவணங்கள் அடிப்படையில், பழனிசாமி நியமித்த நிர்வாகிகள் பெயர்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதற்கிடையே, அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

