சென்னை: அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காமராஜ் தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இவர், 2015 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 வரை அமைச்சராக இருந்தபோது, அரசுப் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ஏறக்குறைய ரூ.127 கோடி சொத்து சேர்த்தது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் தெரியவந்தது.
காமராஜ், அவரது இரு மகன்கள் உள்பட அறுவர் மீது 18,150 ஆவணங்களை சேர்த்து 810 பக்க குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.