விலைவாசி, வரிகள் உயர்ந்துள்ளதாகப் புகார்: 20ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

விலைவாசி, வரிகள் உயர்ந்துள்ளதாகப் புகார்: 20ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

2 mins read
dc424cfd-8efd-4b30-b3e6-535024f926ca
எடப்பாடி பழனிசாமி. - படம்: ஊடகம்

சென்னை: விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் 20ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, அதை முறையாகச் செயல்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டு மக்கள் கடந்த பத்து ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

“அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது திமுக அரசு. அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, கடை வரி உயர்த்தப்பட்டுள்ளது,” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்