சென்னை: தமிழகத்தையும் தமிழக மக்களையும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகால மத்திய பாஜக அரசால் தமிழக மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் திமுக உரக்கக் குரலெழுப்பும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை வெறும் காட்சிப் பொருளாக்கி வேடிக்கை பார்க்கும் பாஜகவுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவும் தாங்காது இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது என மற்றொரு தீர்மானம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைப்புக்குப் பதில், அவற்றின் விலையை விலையையும் விண்ணை முட்டும் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக திமுக எம்பிக்கள் சாடி உள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் மத்திய அரசு விளம்பர மோகத்தில் இருபப்பதாகவும் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாகக் கூறிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து விதவிதமான வரிகளை வசூல் செய்வதாகவும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு பதில், ஒட்டுமொத்த இளையர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்க வைத்துள்ளது.
“இந்திய நிதியமைச்சரிடம் ஏழைகளுக்கு கடனளிக்க எந்த திட்டமும் இல்லை. ஆனால், கார்பரேட் முதலாளிகளின் கண்ணசைவில் இயங்கும் நிறுவனங்களுக்கு தள்ளுபடிகள், வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது,” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏர் இந்தியா, எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்பதில் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுவதாகவும் சமையல் எரிவாயு தொடங்கி மூக்குப்பொடி வரை அனைத்துக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ள திமுக, மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறபோதும் கூட உலக நாடுகளுக்கு இந்தியா அறிவுரை வழங்கி வருவதாக இடித்துரைத்துள்ளது.


