சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பாஜக தலைமை தீவிரப்படுத்தி உள்ளது.
இதையடுத்து டெல்லியில் நடைபெற உள்ள பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக பலம் வாய்ந்த எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதையடுத்து பெங்களூரில் அடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாஜக கட்சித் தலைமை மாநில வாரியாக தனது கூட்டணிக் கட்சிகளை உறுதி செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
பெங்களுரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அதே வேளையில் பாஜகவும் டெல்லியில் தனது கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஜூலை 18ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவின் சார்பில் அதன் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கும் பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாமக, தமாகா ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் தொகுதிப் பங்கீடு, பிரசார முறை ஆகியவை குறித்து அடுத்தடுத்து விரைவாக பேச்சுவார்த்தை நடத்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.