தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மு.க.ஸ்டாலின்: ஆட்சியில் யார் இருக்கக்கூடாது என்பதில்தான் கவனம் உள்ளது

2 mins read
a58ee2a5-7999-4f5a-b031-5a6d2d41e85b
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: இந்தியா சர்வாதிகாரத்தில் சிக்கிச் சிதையுண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் போன்றவை நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன. பெங்களூரில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைத்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதுபோல் இந்தியா முழுவதும் இதுபோன்ற கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டுள்ளது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும் என்றார்.

“2024ஆம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சூழ்நிலையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதில்தான் கவனம் உள்ளது. அது தொடர்பாக பேசி வருகிறோம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று குறிப்பிட்ட அவர், போகப்போக மேலும் பல கொடுமைகள் நடக்கும் என்றார்.

எதையும் சந்திக்க திமுகவினர் தயாராக இருப்பதாகவும் சட்டரீதியாக அனைத்தையும் எதிர்கொள்ளப் போவதாகவும் முதல்வர் கூறினார்.

“ஊழல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளன என்று பிரதமர் சொல்கிறார். டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என சுட்டிக்காட்டப்பட்டவர்கள் பங்கேற்றனர். பாஜக கூட்டணியில் அவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஊழல் கட்சிகள் என்று பிரதமர் விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்