கண்டுகொள்ளாத பாஜக; அணி மாறும் தேமுதிக

கண்டுகொள்ளாத பாஜக; அணி மாறும் தேமுதிக

2 mins read
46d890a5-760e-4b43-9ab3-676d66f7b2a6
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பிரேமலதா. - படம்: ஊடகம்

சென்னை: பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து தேமுதிக விலக இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

இதுகுறித்து எதிர்வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அதையடுத்து பாஜகவும் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து அதிமுக, பாமக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேமுதிகவுக்கு அழைப்பில்லை.

இதனால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் திமுக கூட்டணியில் இணைவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து சிறிய கட்சிகளின் தலைவர்களான ஜான் பாண்டியன், பாரிவேந்தர், தேவநாதன் ஆகியோரும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேமுதிக முக்கியத் தலைவர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருவதாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என கூறி வருவதாகவும் தெரிகிறது.

கூட்டணி தொடர்பாக திமுக தலைமையிடம் தேமுதிகவின் முக்கியப் பிரமுகர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் திமுக தலைமை கூட்டணியில் சேர்க்க முன்வராவிட்டால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் தேமுதிக இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதிர்வரும் 24ஆம் தேதி கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன் முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியாகக்கூடும்.

குறிப்புச் சொற்கள்