சேலம்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக எப்போதும் மக்கள் பணியில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எந்தக் கட்சிக்கும் அடிமையில்லை என்றும் சேலத்தில் நடைபெற்ற கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் நலத் திட்டங்களை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்றார்.
நடப்பு திமுக ஆட்சியில் விலைவாசி பலமடங்கு அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கொள்ளையடித்ததன் காரணமாக அமைச்சர் ஒருவர் சிறையிலும் மற்றொருவர் விசாரணையிலும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசால் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முடியவில்லை என்றார்.
“பாஜகவுக்கு பழனிசாமி அடிமை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நானும் எந்தக் கட்சிக்கும் அடிமையாக இருக்க மாட்டோம்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

