தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

1 mins read
d48e9953-a110-4fa5-8f02-8324a02eb84c
தேசிய புலனாய்வு முகமை அலுவலகம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) காலை முதல் மேற்கொண்டு வரும் அதிரடிச் சோதனை நடவடிக்கைகள் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

திருச்சி, விழுப்புரம், தஞ்சை நெல்லை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக் நெல்லையில் வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சமயம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 13 பேர் கைதான நிலையில், ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து ஒன்பது மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.

கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகவும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்