எடப்பாடி எதிர்ப்பால் இணையும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா

எடப்பாடி எதிர்ப்பால் இணையும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா

1 mins read
8159d4fa-aff2-4641-ba08-230888bd3843
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ், இபிஎஸ். - படம்: ஊடகம்

விருதுநகர்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இனி அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் இரு தரப்பும் இணைந்து செயல்படும் என்றார்.

“வரும் டிசம்பர் மாதம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும்,” என்றார் தினகரன்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக அணியில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரை சேர்க்கக்கூடாது என அதிமுக தலைமை வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அழைக்கப்படவில்லை. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

இந்நிலையில் பழனிசாமியின் எதிர்ப்பு காரணமாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகிய மூவரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உருவாகி உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்