தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறியதில் 9 பேர் மரணம்

2 mins read
7c533c1e-e514-4240-b205-aa454aef4dca
ஜூலை 29 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசுக் கடைக்குப் பரவியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் ரவி என்பவர் பட்டாசுக் கடையையும் கிடங்கையும் நடத்தி வந்தார். அந்தக் கடைக்கு அருகில் ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வந்தார்.

ஜூலை 29 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து, அந்த தீ பட்டாசுக் கிடங்கிற்குப் பரவியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

இதில் ராஜேஸ்வரி, பட்டாசுக் கடைக்காரர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ருத்திகா, மகன் ருதீஷ் ஆகியோர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒன்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பட்டாசுக் கிடங்கில் இருந்தவர்கள் உடல் தூக்கி வீசப்பட்டதால் அப்பகுதியில் உடல் பாகங்கள் சிதறி விழுந்தன. விபத்தின் போது ஹோட்டலில் இருந்த 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திமுக எம்எல்ஏ மதியழகன், அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

நிகழ்விடத்தை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகையில், “உணவகத்தில் சிலிண்டர் வெடித்து பட்டாசுக் கடைக்கும் தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் இன்னும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா, மேலும் உயிரிழப்பு இருக்கிறதா போன்ற தகவல்கள் தெரியவரும்,” என்றார்.

விபத்து நடத்த இடத்துக்கு அருகில் இருந்த பல வீடுகளில் கண்ணாடி உடைந்துள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றோர், நடந்து சென்றோர் மீது கட்டட இடிபாடுகள் சிதறி விழுந்து காயம் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்