கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி பட்டாசு கிடங்கு விபத்து; மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

2 mins read
9fde3a69-d3fa-4c69-8cf2-629a873b9215
தரைமட்டமான கட்டடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்த அதிகாரிகள் - படம்: இந்திய ஊடகம்

கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

வெடிக்காத வெடிகள் மற்றும் தரைமட்டமான கிடங்கின் மண் ஆகியவற்றை ஆய்வுக்காக அவர்கள் சேகரித்தனர்.

கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலையில் ரவி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு கிடங்கு உரிமையாளர் ரவி உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயம் அடைந்தனர். ஆறு கடைகள் தரைமட்டமாயின. பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் வேலூர் மண்டலத்தைச் சேர்ந்த வெடிபொருள் நிபுணர் கணேஷ் தலைமையில் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஞாயிற்றுக் கிழமை ஆய்வு செய்தனர்.

அப்போது, பட்டாசு கிடங்கு உள்ளிட்ட 5 கடைகள் இருந்த கட்டடத்தின் உரிமையாளர் மரியபாக்கியத்தின் மகன் ஆண்டனியிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

எத்தனை கடைகள் வாடகைக்கு விடப்பட்டன. எத்தனை ஆண்டுகள் ரவி வாடகைக்கு இருந்துள்ளார், அங்கு பட்டாசு தயாரிக்கப்பட்டதா போன்ற விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்து பதிவு செய்தனர்.

தரைமட்டமான கட்டடத்திலிருந்து மீட்கப்பட்ட பெரிய குழாய் போன்ற வெடிக்காத வெடி, சணல், திரி, மருந்து நிரப்பும் கட்டைகள், வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு கிடங்கின் மண் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன.

ஆய்வு குறித்துப் பேசிய அதிகாரிகள் கூறும்போது, “இங்கு சேகரிக்கப்பட்ட பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்போம்,” என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்