மதுரை: இன்று மதுரையில் நடைபெறும் மாநாட்டின் மூலம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக முழு வீச்சில் களமிறங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதுரையில் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் அதிமுக மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான மேடை, பந்தல், தொண்டர்களுக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் மூன்று லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு நிகழ்வுகள் அனைத்துமே அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் திரைகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த மாநாட்டின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மேலும், அதிமுக நிர்வாகிகள் துடிப்புடன் செயல்படுகிறார்கள் என்பதையும் தொண்டர்கள் பலம் குறையவில்லை என்பதையும் இம்மாநாடு வெளிப்படுத்தும் என அவர் நம்புகிறார்,” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
“இன்று மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,” என்று இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தொண்டர்களை மாநாட்டுக்கு அழைத்து வர ஏராளமான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதனால் மதுரையில் கடந்த இரு தினங்களாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று பல்வேறு சாலைகள் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மதுரை மாநாட்டுக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரூ.250 கோடி செலவிடுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடி உள்ளார்.
பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்தக் கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பகுதிகளிலிருந்தும் மாநாட்டுக்கு அழைத்து வரப்படுவோருக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது,” என்றார்.

