அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்

2 mins read
d6a82e04-7b60-485e-8c24-b7d167ff7110
ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்தத் தடையும் விதிக்க முடியாது. ஆகையால் ஓ.பன்னீர் செல்வமும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.  - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்தது.

இது ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் பின்னடைவைத் தந்தது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

இடைக்கால பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும். அத்துடன், தங்களைக் கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச். மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழுவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் எனத் தீர்ப்பு அளித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் வெள்ளிக்கிழமை காலை தீர்ப்பளித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. பொதுக்குழுத் தீர்மானங்களை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

எனவே, அதற்குத் தடைவிதித்து அறிவிக்க முடியாது. இப்போது தடைவிதித்தால் கட்சி செயல்பாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பாக எந்தத் தடையும் விதிக்க முடியாது. ஆகையால் ஓ.பன்னீர் செல்வமும், மற்றவர்களும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்