சென்னை: அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அவர் 3-வது அணியை அமைப்பதற்கும் ஆயத்தமாகி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிமுக-பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராகி வருகின்றன.
அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துக்கு அழைத்து பிரதமர் அருகில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுத்ததை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அந்த கூட்டத்துக்கு அழைக்காமல் பா.ஜனதா புறக்கணித்திருப்பதையும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியைத் தூக்கி வைத்துக்கொண்டு அதே நேரத்தில் தன் தரப்பை உதாசீனப்படுத்தும் பாஜகவைப் பழிவாங்க பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க பன்னீர்செல்வம் தரப்பு விரும்புகிறது.
தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது ஒருபுறம் இருக்க, பாஜக, காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

