தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆதித்யா-எல்1’ திட்ட இயக்குநராகச் சாதனை படைத்த தமிழகப் பெண் விஞ்ஞானி நிகர் சாஜி

2 mins read
3c5a99b4-60b7-4ad5-b5b7-e4c6fe1c94be
நிகர் சாஜி. - படம்: ஊடகம்

சென்னை: சூரியன் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமாகிய இஸ்‌ரோ மேற்கொள்ளும் ‘ஆதித்யா-எல்1’ திட்ட இயக்குநராகச் செயல்படும் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இஸ்‌ரோ செயல்படுத்தும் முக்கிய திட்டங்களுக்குத் தமிழக விஞ்ஞானிகள் தொடர்ந்து தலைமையேற்று வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட ‘சந்திரயான் 3’ திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா எல்1 திட்டத்துக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவரே பொறுப்பேற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் சாஜி தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இவர் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். அச்சமயம் அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.

பின்னர் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்த நிகர் சாஜி, பிர்லா தொழில்நுட்ப மையத்தில் மேற்படிப்பை முடித்துப் பின்னர் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கு படிப்படியாகப் பல்வேறு பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்த பின்னர், தற்போது ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநராக உயர்ந்துள்ளார்.

கடந்த 1987ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நிகர் சாஜி, 36 ஆண்டுகளாகப் பணியில் நீடித்து வருகிறார். இவரது கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராகவும் மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகவும் பணிபுரிகின்றனர். மகள் தஸ்நீம் மங்களூருவில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.

ஆதித்யா-எல்1 விண்கலம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசாவுக்குக் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்டார் நிகர் சாஜி. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் இஸ்‌ரோவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

சந்திரயான்-1 திட்டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் வனிதா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்துவேல், மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா உள்ளிட்ட தமிழர்கள் திட்ட இயக்குநர்களாகச் செயல்பட்டு தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்