தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரன் பெயரில் பாசறை; நிர்வாகிகளை நீக்கிய திமுக தலைவர்

1 mins read
1618d3f3-8238-4c3c-841e-d76313aa06e5
புதுக்கோட்டையில் ஒட்டப்பட்ட ஒரு சுவரொட்டி. - படம்: ஊடகம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரன் இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கிய திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். அவரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

எனினும் எதிர்க்கட்சிகள் திமுகவில் வாரிசு அரசியல் இன்னும் நீடித்து வருவதாக விமர்சனம் செய்தன.

இந்நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியை முன்னிலைப்படுத்தி திமுக நிர்வாகிகள் சிலர் அரசியல் செய்யத் தொடங்கி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் அண்மையில் இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கினர். பின்னர் அந்தப் பாசறையின் மூலம் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

இதுதொடர்பாக புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. திமுக தலைமையின் அனுமதியைப் பெற்றே இவ்வாறு நடப்பதாக அக்கட்சியின் மற்ற பிரமுகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்பநிதி பெயரில் பாசறை தொடங்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

“கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்,” என அறிக்கை ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்