சென்னை: சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவர் மீது பீகார் மாநிலத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. ஏற்கெனவே டெல்லி காவல் நிலையத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரான வினீத் ஜிண்டாலும் உதயநிதி மீது புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழக அரசு இல்ல ஆணையரிடம் உதயநிதிக்கு எதிராக பாஜக குழு ஒன்று கடிதம் அளித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை சென்னையில் ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும்,” என்று குறிப்பிட்டார்.
இதுதான் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் உதயநிதியின் கருத்து புது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுகவினர் வாக்கு வங்கி அரசியலுக்காக, சனாதன தர்மம் குறித்து பேசுவதாக விமர்சித்துள்ளார். அரசியலுக்காக சனாதன தர்மத்தை அவமதிக்கின்றனர் என்றும் சாடியுள்ளார்.
திமுகவினர் வெறுப்பு அரசியலைப் பரப்பி வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தலில் இந்துக்களுக்கு எதிரான வியூகத்தை இந்தியா கூட்டணி பயன்படுத்தப் போகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்தியாவில் சனாதனத்தைப் பின்பற்றும் 80 விழுக்காடு மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுப்பது போன்றது,” என பாஜக செய்தித் தொடர்பாளர் சேஷாக்பூரி வாலா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் பாஜக தலைமை உதயநிதியைக் குறிவைத்து அரசியல் களத்தில் காய்களை நகர்த்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லி பாஜகவினர் திங்கட்கிழமை அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜியிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும்படி கூறினர். அந்த கடிதத்தில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பீகார் மாநிலம், முசார்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அளிக்கப்பட்டுள்ள புகாரின் பேரில், உதயநிதி மீது உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ள காணொளிப் பதிவும் புகார் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனாதன தர்மம் குறித்து தாம் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தம் மீது எத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் அவை அனைத்தையும் சட்டபூர்வமாக சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
“மக்களுக்கான உரிமை ஒவ்வொரு காலத்திலும் பெற்றுத் தரப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிடம். அதைக் குறிப்பிட்டுத்தான் நான் பேசினேன்.
“திமுக தொடங்கப்பட்டது சமூக நீதிக்காகத்தான். எந்த மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை. மதத்திற்குள் இருக்கக்கூடிய சாதிப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பேசுகிறது,” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் விளக்கம் அளித்துள்ளார்.