ராமதாஸ்: கர்நாடக அரசு காவிரி தண்ணீரை நிறுத்தியது மன்னிக்க இயலாத குற்றம்

2 mins read
c0b0c5dd-bab9-4ae7-91aa-8d0020f35d69
ராமதாஸ். - படம்: இந்திய ஊடகம்.

சென்னை: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடாதது கர்நாடகா செய்துள்ள மன்னிக்க முடியாத குற்றம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“உள்ளூர் அரசியலுக்கு அஞ்சியும் தூண்டிவிடப்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு பயந்தும் சிறிதும் மனித நேயமின்றி தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியுள்ளது.

“காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

“ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை,” என அறிக்கை ஒன்றில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற அடுத்த 20 நாள்களுக்கு குறைந்தது ஒரு டி.எம்.சி வீதம் 20 டி.எம்.சி தண்ணீராவது தேவை என்று தெரிவித்துள்ள அவர், கர்நாடக அணைகளில் 64 டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

கர்நாடக அரசு நினைத்தால் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் ஆனால் அம்மாநில அரசோ தண்ணீரை நிறுத்தி மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

“எதுவுமே செய்யாமல் அமைதி காப்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் விளையாது. வரும் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்,” என ராமதாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்