வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு

1 mins read
a2c77668-1cbd-43f7-b937-7ff4bb9c4b8a
சீமான், விஜயலட்சுமி. - படம்: ஊடகம்

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவானதை அடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பேரில் காவல்துறை நடத்தி வரும் தீவிர விசாரணையால் சீமானுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அவர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவான நிலையில், தற்போது கூடுதலாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து ஏமாற்றி விட்டதாகவும் ஏழு முறை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் விஜயலட்சுமி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவரிடம் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், அவரை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் அளிக்கச் செய்தனர். பின்னர் விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதையடுத்து காவல்துறையின் கவனம் முழுவதும் சீமான் பக்கம் திரும்பியுள்ளது. நேரில் முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு காவல்துறை அழைப்பாணை அனுப்பியது. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

இது அவரைக் கைது செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கை எனக் கூறப்படுவதால் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.

குறிப்புச் சொற்கள்