அமைச்சர் துரைமுருகன்: கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நீதிமன்ற மேற்பார்வையில் அளவிட வேண்டும்

அமைச்சர் துரைமுருகன்: கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நீதிமன்ற மேற்பார்வையில் அளவிட வேண்டும்

2 mins read
5ba6bf00-0239-4956-8c8d-ec57d74c9b7a
கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நீதிமன்ற மேற்பார்வையில் அளவிடப்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். செப்டம்பர் 14ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

“கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை திமுக வலியுறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அது எங்களை கெடுக்கும் வேலை.

“காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீரைவிட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அதன்பின், எங்களுக்கு ஒரே தீர்வு உச்சநீதிமன்றத்தை நாடுவது மட்டுமே. இந்த விவகாரம் தொடர்பாக, வரும் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வருகிறது. அதன்பின் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

“தமிழ்நாடு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுத்து நிச்சயம் நிவாரணம் வாங்கித்தருவோம். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் வலுவிழக்கும்.

“தமிழக விவசாயிகளின் நலனைப்பாதிக்கக் கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துரைத்து, திறம்பட வாதாடி, காவிரியில் தமிழகத்துக்கான நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்,” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்