புதுடெல்லி: கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும்கூட தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்குத் துளியும் இல்லை என புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலையில் மூழ்கி உள்ளனர். இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், கர்நாடகாவுக்கே போதுமான தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என அம்மாநில அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது.
இதையடுத்து, மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது தமிழக அரசு. இதற்காக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழக குழு ஒன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் புதுடெல்லி சென்றுள்ளது.
அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசியதுடன் கோரிக்கை மனு ஒன்றையும் தமிழகக் குழு அளித்துள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீர் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கிக் கூறியதாகக் குறிப்பிட்டார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்குத் துளியும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. இவை பிறப்பிக்கும் உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசு கர்நாடகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
இதற்கிடையே, தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு செப்டம்பர் 22ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

