‘சவர்மா’ சாப்பிட்டு உயிரிழந்த மாணவி - நாமக்கல்லில் 4 பேர் கைது

‘சவர்மா’ சாப்பிட்டு உயிரிழந்த மாணவி - நாமக்கல்லில் 4 பேர் கைது

2 mins read
03b620d3-4a54-4827-9b23-ebf72b98f8d6
நாமக்கல்லில் நூற்றுக்கு மேலான உணவுக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். - படம்: ஊடகம்

நாமக்கல்: அண்மையில் ‘சவர்மா’ சாப்பிட்டு பள்ளி மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். அந்தச் சம்பவத்தில் கோழி இறைச்சி, இறைச்சி விற்பனை செய்த கடைக்காரர்கள் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது.

நாமக்கல்லில் ‘ஐ வின்ஸ்’ என்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா எனப்படும் கோழி இறைச்சி சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14) உயிரிழந்தார். மேலும், அதே ஹோட்டலில் ‘சவர்மா’ சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 43 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவின் பேரில் தனியார் ஹோட்டல் மூடப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், சமையல்காரர்கள் இருவர் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, மாவட்டம் முழுவதும் ‘சவர்மா’, கிரில் சிக்கன் விற்பனை செய்யவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள சுகாதார அலுவலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக்கடைகள், கறிக்கோழிக்கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிட்டனர். இதில் 37 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனிடையே தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்த நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த கோழி இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்