பாஜக மாவட்டத் துணைத்தலைவர் உள்ளிட்ட 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்

பாஜக மாவட்டத் துணைத்தலைவர் உள்ளிட்ட 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்

2 mins read
5483812e-646f-4726-b2fa-740152e04dbe
பாஜக - அதிமுக இடையே பிரச்சினை என்று யாரும் கூறவில்லை. அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சொன்ன விதம்தான் தவறு என கூறினோம் என்கிறார் செல்லூர் ராஜூ -

மதுரை: மதுரை மாவட்டத்தின் பாஜக துணைத் தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட 100 பேர் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையில் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனர்.

இதுகுறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, பாஜக தொண்டர்கள் அதிமுகவில் இணைவதால் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே எவ்விதப் பிணக்கும் இல்லை.

அறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்குத்தான் எங்கள் கட்சி சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.

பாஜக - அதிமுக இடையே பிரச்சினை என்று யாரும் கூறவில்லை. மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை நாங்கள் சொல்கிறோம். மோடி, அமித்ஷா, நட்டா ஆகிய தலைவர்கள் எங்களை மதிக்கிறார்கள். அதுபோதும். அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சொன்ன விதம்தான் தவறு என கூறினோம்.

மானத்தை இழந்து, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிசாமி பாஜக காலில் விழமாட்டார். எங்கள் கொள்கை அண்ணாயிசம்.

பாஜகவை அண்ணாமலை வளர்ப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியாவுக்கு பிரதமர் மோடி என்றால், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறியுள்ளார் செல்லூர் ராஜு.

அண்மையில், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டு பேசுகின்றவர்களுக்குப் பதில் சொல்லி என்னுடைய தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில், எனக்கு எல்லாப் பதவிகளும் படிப்படியாகத் தான் வந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில் இருக்கிறேன். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டிதான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்று வசைபாடியிருந்தார். 

இந்நிலையில், அதிமுக தலைவர்களுடனான உறவு குறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. நான் யாரையும் தவறாக பேசவில்லை.

“எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். தன்மானமே எனக்கு முக்கியம். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க பேசிய கருத்துகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

“மது வேண்டாம் என்றவர் அண்ணா. ஆனால் மதுக்கடைகளுக்குக் கையெழுத்துப் போட்டவர் கருணாநிதி. அறிஞர் அண்ணாவை பற்றி நான் தரக்குறைவாக எங்கேயும் விமர்சித்தது இல்லை.

“நாளை அ.தி.மு.க தலைவர்களைப் பார்க்கும்போது வழக்கமான மரியாதையோடு தான் பழகுகிறேன். எனக்கும் அ.தி.மு.க தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாற்று ரீதியாக நடந்தவற்றையே நான் பேசினேன். அதில் எந்தத் தவறும் இல்லை,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்