மயிலாடுதுறை: கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும் என்று மயிலாடுதுறை விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் தண்ணீரில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டத்தில் முழக்கமிட்டனர்.
அத்துடன், தண்ணீரின்றி பயிர்களைப் பறிகொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மாதவாரிய காவிரி தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அப்போராட்டத்தில் விவசாயிகள் முன்வைத்தனர்.

