சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை, தமிழகத்தில் முதல் கட்சியாக தொடங்கி உள்ளது திமுக தலைமை.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியது திமுக.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தின், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆகியோரும் திமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலிலும் அக்கட்சிக்கு இதே இடம்தான் ஒதுக்கப்படுமா அல்லது அக்கட்சி வேறு தொகுதியைக் கேட்டுள்ளதா என்பது தெரியவில்லை.
எனினும், அடுத்த தேர்தலிலும் அக்கட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணியின் தலைவர்கள் அண்மையில் மும்பையில் சந்தித்துப் பேசினர். அப்போது தொகுதிப் பங்கீட்டை விரைவில் முடித்து, பிரசாரத்துக்குத் தயாராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையிலேயே திமுக தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.