பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக; பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்

3 mins read
4cebe4ba-4b85-413c-a7e0-5c3718ae6fe9
உற்சாகத்தில் அதிமுகவினர். - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக, பாஜக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

பாஜகவுடனான கூட்டணியில் இருந்தும் அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக தலைமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனால் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்கள், கூட்டணிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக தலைமையின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன், அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் இனிப்புகள் விநியோகித்து, இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக அதிமுக, பாஜக இடையே உரசல் நீடித்து வந்தது. தமிழக பாஜக பிரமுகர்களும் அதிமுக தலைவர்களும் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டனர்.

பாஜக மத்திய புலனாய்வு முகமைகள் மூலம் சோதனை நடவடிக்கைகள், வழக்குகள் என்று மறைமுகமாக மிரட்டல் விடுப்பதாகவும் இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரு தினங்களுக்கு முன்பு கோபமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கட்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பெரும்பாலானோர் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மாநில தலைமை, கடந்த ஓராண்டாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு அதிமுகவின் கொள்கைகளை விமர்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் காலஞ்சென்ற முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து பாஜகவினர் அவதூறாகப் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“பாஜகவின் இத்தகைய போக்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

“இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணம், விருப்பம், உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ‘அதிமுக இன்று முதல், பாஜக கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது’ என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்,” என்று கே.பி.முனுசாமி கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக தலைமையிலான புதிய கூட்டணி எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சித் தலைமை நல்ல முடிவை எடுத்திருப்பதாகவும் முழக்கமிட்டனர்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என முடிவு செய்துள்ள நிலையில், இனி எந்தப் பிரச்சினை வந்தாலும் சந்திக்கத் தயார் என்றார்.

மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்று தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே, அதிமுகவின் முடிவு குறித்து கட்சி மேலிடம்தான் கருத்து தெரிவிக்கும் என்றும் தமிழக பாஜகவினர் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை என்றும் அக்கட்சி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், பிளவு என்பது கொள்கை ரீதியாக இருக்க வேண்டும் என்றார்.

“எங்களுக்குப் பாஜக கொள்கை பிடிக்கவில்லை என்று சொல்லி அதிமுக வெளியே வந்து இருந்தால் அது போற்றுதலுக்குரிய ஒரு விஷயம். தனி மனித விரோதம் நீடிக்காது. அது சரியும் அல்ல,” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்