விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு அக். 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 mins read
739c984f-cfb1-40c0-8c00-e1605a5beee7
அதிமுகவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். - கோப்புப்படம்

புதுக்கோட்டை: அ.தி.மு.க.வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர்.

இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் முன்னிலையாகியிருந்தார். அப்போது வழக்கின் விசாரணையை செப் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் அந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், குற்றப் பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளன.

எனவே, அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். அதையடுத்து இந்த வழக்கு தொடர்புள்ள ஆவணங்களை விஜயபாஸ்கர் தரப்புக்கு லஞ்ச ஒழிப்பு துறை முழுமையாக வழங்க உத்தரவிட்டு, வழக்கை வருகிற அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

குறிப்புச் சொற்கள்