அதிமுகவில் உருமாற்றம்; தொகுதிகளில் அமைப்பாளர் நியமனத் திட்டம்

அதிமுகவில் உருமாற்றம்; தொகுதிகளில் அமைப்பாளர் நியமனத் திட்டம்

2 mins read
2f913868-9002-4e3d-8033-349700205383
அதிமுக, மதுரையில் அண்மையில் பிரமிக்கவைக்கும் மாநாட்டை நடத்தியது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் கட்சியான அதிமுகவில் பெரிய அளவில் உருமாற்றம் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கட்சியான பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டதை அடுத்து தன்னைப் பலப்படுத்த அதிமுக திட்டம் போடுகிறது. அதேவேளையில், வலுவான வேறு கூட்டணியை அமைக்கவும் அதிமுக வியூகம் வகுக்கிறது.

அந்த வியூகத்தின் ஒரு பகுதியாக ஒவ்வெரு சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி அமைப்பாளர்களை நியமிக்க அதிமுக திட்டமிடுவதாக ஊடகங்கள் கூறின.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக இப்போது இருந்து வரும் அதிமுக சென்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டு 66 இடங்களைப் பிடித்து 33.29% வாக்குகளைப் பெற்றது.

அதேவேளையில், ஆளும் திமுக 133 இடங்களில் வென்றது. திமுக பெற்ற வாக்குகள் 37.7% ஆக இருந்தது.

இவ்வேளையில், அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றது என்றாலும் அது பெற்ற வாக்கு விகிதம் வெறும் 2.61%தான்.

கணக்கிட்டுப் பார்க்கையில் சென்ற தேர்தலில் திமுக, அதிமுக இரண்டிற்கும் இடையில் வாக்கு வேறுபாடு வெறும் 4.41%தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் உறவு வைத்ததே அதிமுக தோற்றதற்குக் காரணம் என்று அந்தக் கட்சி நம்புகிறது. ஆகையால் பாஜகவைக் கழற்றிவிட்டுவிட்டு தேர்தலைச் சந்தித்தால் திமுகவைவிட அதிக வாக்கு பெற்றுவிடலாம் என்று அதிமுக கணிக்கிறது.

“பாஜகவில் இருந்து பிரிந்ததை அடுத்து திமுக அணியில் இருக்கும் சில கட்சிகள் கூட இப்போது எங்களை பாசமாகப் பார்க்கின்றன.

“பல தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சரியான நேரத்தில் சரியான முடிவை அதிமுக எடுக்கும்,” என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் செய்தி ஊடகம் தெரிவித்தது.

அதிமுக அக்டோபர் 2வது வாரம் முதல் ஒவ்வாரு சட்டமன்றத் தொகுதியிலும் கட்சி அமைப்பாளரை நியமிக்கும் என்று அவர் கூறினார்.

வாக்குச்சாவடி தலைவர்கள், செயலாளர்களுடன் செயல்பட்டு அவர்கள் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பார்கள்.

அடித்தளநிலையில் பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து மத்திய, மாநில அரசுகளின் தில்லுமுல்லுகளை, குறைகளை அவர்கள் வெளிக்கொணர்வார்கள்.

ஆளும் திமுகவின் ஊழல்களை, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வதும் தமிழின், தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றுவதிலும் கட்சி மும்முரமாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்