சென்னை: காவிரி விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரிப் போராட்டம் தொடர்பான பழைய காணொளிகளை தற்போது நடந்ததைப்போல சித்திரித்து பரப்பப்பட்டு வருவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில், தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவது போன்ற பழைய காணொளிகளை தற்போது நடந்ததுபோல் மாற்றி ஒருசிலர் வெளியிட்டு வருவதை அடுத்தே டிஜிபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது.
ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட, காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பெங்களூர் நகரில் பந்த் நடத்தப்பட்டது.

