சிவகாசி: காவிரி நீர்ப் போராட்டம் பாஜக தூண்டுதலால் நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான மாணிக்கம் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாஜகவால் அரைமனதோடு கொண்டு வரப்பட்டு அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“மசோதாவை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
“கர்நாடக பாஜக தலைவர்கள் தூண்டிவிட்டுத்தான் அங்கு போராட்டம் நடைபெறுகிறது.
“இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் அது நோட்டாவுக்குதான் போட்டியாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று அண்ணாமலை போட்டியிட வேண்டும்.
“பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு பல லட்சம் தொழிலாளர்களையும் இந்தியாவின் அடையாளமாக உள்ள பட்டாசுத் தொழிலையும் பாதிக்கும்.
“பாஜக அரசு இருக்கும் வரை பட்டாசுத் தொழிலுக்கான தொல்லை தொடரும் என்பது தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“தமிழக உயர்கல்வி துறையில் தேவை இல்லாத குழப்பத்தை ஆளுநர் ரவி ஏற்படுத்தி வருகிறார். கல்வித் துறையில் ஆர்எஸ்எஸ் நபர்களை திணிக்க அவர் முயற்சி செய்து வருவது கண்டிக்கத்தக்கது,” என்று மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

