தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக கூட்டணி என்பதே இனி கிடையாது: கே.பி. முனுசாமி

2 mins read
943f34c8-0835-4678-a4ca-69801fa90ccc
அதிமுக தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது என்கிறார் கே.பி. முனுசாமி - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கிருஷ்ணகிரி: இனியொருபோதும் பாஜகவுடன் கூட்டணியில்லை என்று அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளர்.

கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பா.ஜ.க.வை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த முடிவை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதிமுக தொண்டர்களின் உணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

சில ஊடகங்களும், அரசியல் விமர்சகர்களும் எங்கள் நிலைப்பாடு குறித்து தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் இம்முடிவு ஒரு நாடகம் என்கின்றனர்.

அண்ணாவை விர்சிக்கும்போது அவரின் பெயரை கட்சியின் பெயராக வைத்து இருக்கும் இயக்கத்தால் எப்படி அதனை சகித்துக் கொள்ள முடியும். அண்ணா குறுகிய காலத்தில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர். நாங்கள் ஒரு போதும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என வலியுறுத்த மாட்டோம்.

இனி ஒரு போதும் பா.ஜ.க. உடன் கூட்டணி என்பதே கிடையாது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து உள்ளனர். மிசாவை கொண்டு வந்தவர் இந்திராகாந்தி அப்போது சிறை சென்று வந்த ஸ்டாலினை மிசா வீரன் என்றார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஸ்டாலினும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்போம். நாங்கள் மக்கள் பிரச்சனையை முன்வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம். இவ்வாறு கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

இதற்கிடையே அதிமுகவுடன் பாஜக தேசிய தலைமை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக அல்லது பாஜக தரப்பு இதை மறுக்கவோ ஆமோதிக்கவோ இல்லை.

குறிப்புச் சொற்கள்