தமிழ்நாட்டில் 8 கி.மீ. நடைப்பயிற்சித் திட்டம் அக்டோபரில் தொடக்கம்

தமிழ்நாட்டில் 8 கி.மீ. நடைப்பயிற்சித் திட்டம் அக்டோபரில் தொடக்கம்

2 mins read
00d3a75b-5eb3-4c6c-a72a-4b7b3bc11641
‘நடப்போம் நலம்பெறுவோம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி தூத்துக்குடியில் அதிகாரபூர்வமற்ற முறையில் நடந்தது. அதில் சுகாதார அமைச்சர் பங்கேற்றார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உடல்நலம் மேம்படுவதற்காக தமிழக அரசாங்கம் 8 கி.மீ. நடை என்ற திட்டத்தை அமலாக்குகிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது,

முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்தத் திட்டத்தை அக்டோபர் மாதம் தொடங்கி வைத்து 8 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைப்பயிற்சியை மேற்கொள்வார் என்று மாநில சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

‘நடப்போம் நலம்பெறுவோம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய அந்த 8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி அதிகாரபூர்வமற்ற முறையில் வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடந்தது.

உலக இதய தினத்தை முன்னிட்டு மாநிலத்தின் பொதுச் சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த அதிகாலை நிகழ்ச்சியில், அமைச்சர் மா சுப்பிரமணியன், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், பல துறைகளையும் சேர்ந்த உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய மருத்துவப் பிரிவு ஏற்பாட்டில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும் நடந்தது.

அதிகாலையில் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள், நல்ல உணவை உட்கொண்டு இதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய தேவை பற்றி சுகாதார அமைச்சர் விளக்கினார்.

அன்றாடம் காலையில் தான் சராசரியாக 15 கி.மீ. நடப்பதாக அமைச்சர் கூறினார். அப்படி நடப்பதால் சாப்பாட்டில் தாராளமாக இருக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.

நோயற்ற வாழ்வுதான் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், தமிழக கிராமப்புறங்களில் 10,999 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாரடைப்பு மரணத்தைத் தவிர்க்கும் வகையில் முதல்கட்ட சிகிச்சையாக 14 வகையான மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்