கன்னியாகுமரியில் இடைவிடாத கனமழை

கன்னியாகுமரியில் இடைவிடாத கனமழை

2 mins read
64925e28-cf46-4483-a5cc-3a2fdbb305e4
படம்: - ஊடகம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடந்த ஐந்து நாள்களாக இடைவிடாது இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கீரிப்பாறை, குற்றியாறு உட்பட மலைக் கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவானது. அதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டக் கல்வி நிலையங்களுக்கு இரண்டாவது நாளாக புதன்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

கனமழை காரணமாக குமரி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் தாழக்குடி மீன மங்கலத்தை சேர்ந்த வேலப்பன்(60) என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வேலப்பன் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் பல மலைக்கிராமங்களில் சாலைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அவற்றை தீயணைப்புப் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகபட்சமாக குருந்தன் கோட்டில் 134 மிமீ. மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் பதிவான அதிகபட்ச மழை விகிதம் இதுவாகும்.

மழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 48 அடி உயரமுள்ள பேச்சிப்பாறை நீர்மட்டம் புதன்கிழமை 30 அடியை தாண்டியது. அணைக்கு விநாடிக்கு 2,127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதையடுத்து அணையில் இருந்து 331 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

மழை வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையிலும் கனமழையை எதிர்கொள்ளும் வகையிலும் தீயணைப்புத் துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.

மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு அதிகபட்சம் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. சின்ன முட்டம், குளச்சல், முட்டம் உட்பட்ட மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து படகுகள் கடந்த இரண்டு நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6 மாதங்களுக்கு பின்னர் ஐந்து அடியாக உயர்ந்துள்ளதால் அது அவ்வட்டார மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்