தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் நாடு அரசு: இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்

2 mins read
1fc1e5fb-0142-4fe0-9ed7-67b1b75c6e0f
தமிழ் நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.  - கோப்புப்படம்

சென்னை: பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் முஸ்லிம் குழு, இஸ்ரேலுக்கு எதிராக சனிக்கிழமை காலை 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை இருதரப்பிலும் 500க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைப் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அதையடுத்துப் பல நாடுகள் அங்குள்ள தத்தம் நாடுகளைச் சேர்ந்தோர்க்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்பதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளதாக தமிழ் நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நலவாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அதில் கோவையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் உள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். அந்த 18 பேரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் nrtchennai@tn.gov.in, என்ற nrtchenna.in@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் 97235 256748 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலம் புனிதப் பயணத்தைத் தவிர்க்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்நிலையில் அங்கு வாழும் இந்தியர்கள் சிலரைப் பிரதிநிதித்து, ஒருவர் நியூஸ்18 இணைய ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், தாங்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்