சேலம்: மேட்டூர் அணை வறண்டு போனதையடுத்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதாக ஏசியா நெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை காலையில் தண்ணீர் வரத்து நின்றதையடுத்து விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்குக் கைகொடுக்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில் சாகுபடி அபாரமாக இருக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும்.
நடப்பாண்டில் டெல்டா பகுதிகளில் பருவமழை போதுமான அளவில் இல்லை. கர்நாடக அரசும் காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறது. எனவே குறுவை, சம்பா என்று எந்தவிதமான சாகுபடியையும் விவசாயிகளால் மேற்கொள்ள முடியவில்லை.
110 நாள்களுக்கு முன்னரே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது நின்றுவிட்டது. இது விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய 49 டிஎம்சி தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் பெரிதும் சரிந்துள்ளது. எனவேதான் டெல்டா பாசனத்துக்கு அந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரியை நம்பி பயிரிட்ட பயிர்கள் கருகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கவலை அடைந்துள்ள டெல்டா பகுதி விவசாயிகள், அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
12ஆம் தேதி நடைபெற இருந்த இந்தக்கூட்டம் ஒருநாள் முன்னதாக நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார்.
இதில், அடுத்த பதினைந்து நாள்களுக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.

