புதுடெல்லி: எதிர்வரும் 16ஆம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை விநாடிக்கு மூவாயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
மூவாயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு ஒழுஙகாற்றுக்குழு அறிவுறுத்தியது.
எனினும், கர்நாடக மாநில தரப்பில் இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் தயக்கம் நிலவியதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட ஆணையத் தலைவர் உத்தரவிட்டார்.
அக்கூட்டம் சனிக்கிழமையன்று (நேற்று) நடைபெற்றது.
அப்போது தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுவை மாநிலப் பிரதிநிதிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தார் ஆணையத் தலைவர்.
அதன் பின்னர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்று அம்மாநில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசின் பிரதிநிதிகள், உரிய நேரத்தில் காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகியுள்ளதாகக் குறிப்பிட்டனர். எனவே, விநாடிக்கு 16,000 கன அடி நீரை திறந்துவிடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலி யுறுத்தினர்.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. விநாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரு நாள்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதே இதற்குக் காரணம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

