கன்னியாகுமரி: மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தாவின் மரணம் குறித்த வழக்கில் அக்கல்லூரியின் பேராசிரியர் பரமசிவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிர்தா (27) என்ற மாணவி குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் (MD) அனஸ்தீசியா படித்து வந்தார்.
கல்லூரி வளாகத்திலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அக்டோபர் 6ஆம் தேதி வகுப்புக்குச் செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் அவரைப் பார்ப்பதற்காக விடுதிக்குச் சென்றனர்.
அப்போது சுகிர்தா இருந்த அறை உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதுகுறித்து மாணவியர் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சுகிர்தா தங்கியிருந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர்.
அதில், அங்கு பணிபுரியும் பேராசிரியர் பரமசிவன் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவருடன் சேர்ந்து மூத்த மாணவர் டாக்டர் ஹரீஷ், மூத்த மாணவி டாக்டர் பிரீத்தி ஆகியோர் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும் இறந்துகிடந்த மாணவி சுகிர்தா அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டியதாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் தலைவர்கள் கூறிவந்தனர். மேலும் தலைமறைவான மாணவர் ஹரீஷை காவல்துறையினர் தேடிவரும் நிலையில் மாணவி பிரீத்தியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு மருத்துவ மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

