தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும்: சோனியா

2 mins read
0931dc84-bcbf-4f61-b7cd-af000ea31f4c
சோனியா காந்திக்கு காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் சிறிய உருவச் சிலையை முதல்வர் ஸ்டாலினும் திமுக எம்பி கனிமொழியும் நினைவுப் பரிசாக வழங்கினர். - படம்: ஊடகம்

சென்னை: ‘இண்டியா’ கூட்டணியின் ஆட்சி அமைந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், காலஞ்சென்ற தமிழக முதல்வர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் செயல்படுத்திய திட்டங்கள் பெண்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

“அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள். பெண்ணுக்கு கல்வி கற்று கொடுத்தால், ஒரு குடும்பத்திற்கே கல்வி கற்றுத் தரப்படுவதாகும்.

“காந்தியின் அறவழி போராட்டம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது.

“பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது தொடர் போராட்டத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதில் அனைவருக்கும் குழப்பம் இருக்கிறது,” என்றார் சோனியா காந்தி.

முன்னதாகப் பேசிய திமுக எம்பி கனிமொழி, பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றார்.

இதற்கு மணிப்பூர் நல்ல உதாரணம் என்றும் குஜராத்தில் பாஜகவினர் செய்த அட்டூழியங்களாலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள்தான் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கிவிட அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

“பதினோரு பெண் மேயர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.

“பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது,” என்று பேசினார் கனிமொழி.

பிரியங்கா காந்தி பேசுகையில், தந்தை பெரியார் வழியில் அண்ணாவும் கருணாநிதியும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர் என்றார்.

“சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது. நாம் முழுமையாக சமத்துவத்தை பெற இன்னும் உழைத்தாக வேண்டும்,” என்றார் பிரியங்கா காந்தி.

மாநாட்டுக்கு தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எந்தச் சூழலிலும் சமூக நீதியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

“சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல், அனைவருக்குமான அரசியல் பங்கீடு போன்ற கோட்பாடுகளை கொண்டதாக இண்டியா கூட்டணி அமைந்திருக்கிறது. இதனை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல அனைத்து உரிமைகளும் கிடைக்கும் இந்தியாவை உருவாக்கலாம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

திமுக மகளிர் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலே, சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்