கிருஷ்ணகிரி: சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்த உதவிய ஆடவரை கிருஷ்ணகிரி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த மையம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தியாவில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிவதும் அதை வெளியே தெரிவிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு அண்மையில் கருக்கலைப்பு நடந்துள்ளது.
இவருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது முறையாகத் தாய்மையடைந்த அவர் இம்முறை ஆண் குழந்தையை எதிர்பார்த்தார்.
இந்நிலையில், ஒரு தரகர் மூலம் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த சுகுமாரன் குறித்து காயத்ரிக்குத் தெரியவந்தது. அம்மையத்தில் அவருக்கு ‘ஸ்கேன்’ செய்யப்பட்டதில் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கருக்கலைப்பு செய்த உமாராணி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
வேடியப்பன், சுகுமாரன் ஆகிய இருவரும் நரிமேடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதை கருக்கலைப்பு மையமாக மாற்றி உள்ளனர். அங்கு கருக்கலைப்புக்காக ஐந்து பெண்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும் அவர்களிடம் இருந்து கணிசமான தொகை பெறப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் தப்பியோடிய நிலையில், இவர்களுக்கு உதவியாக இருந்த சங்கர் என்பவர் சிக்கி உள்ளார்.