நாமக்கல்: அரசு மருத்துவமனையில் பிரசவிக்கப்படும் குழந்தைகள் பணத்துக்காக விற்கப்படுவது அம்பலமாகி உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மூன்றாவது பிரசவத்துக்காக வரும் ஏழைப் பெண் இது தொடர்பாக மூளைச்சலவை செயய்யப்பட்டதும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செங்கோடு அரசுப் பொது மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் ஒருவர் குழந்தை விற்பனை தொடர்பாக எழுந்த புகார்களின் பேரில் கைதானார். இடைத்தரகர் லோகாம்பாள், அரசுப் பெண் மருத்துவர் அனுராதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து கைதாகி உள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ச.உமா, கைதான இடைத்தரகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு மருத்துவர் கருக்கலைப்பு செய்ய வந்த பெண்களை வற்புறுத்தி குழந்தை பெற வைத்து அந்தக் குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது என்றார்.
“மேலும், மூன்றாவது பிரசவத்திற்காக வரும் ஏழைப் பெண்ணை மூளை சலவை செய்து அக்குழந்தைகளை விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் விசாரணையில் உறுதியாகி உள்ளது,” என்றார் மாவட்ட ஆட்சியர் உமா.