விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதி யில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது 4,600க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறு வதாகவும் இதுவரை கிடைத்த பொருள்களை கண்காட்சியில் வைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட அகழாய்வில் பல்வேறு ஆபரணங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணி, சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் ஏற்கெனவே கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இதுவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர் என 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொல்பொருள்களை பார்வையிட்டுள்ளனர்.
“அகழாய்வுப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அதற்காக தோண்டப்பட்ட குழி களில் இருந்து தற்போது குறைவான பொருள்களே கிடைத்து வருகின்றன.
“இதுவரை சில்லுவட்டுகள், உடைந்த சங்கு வளையல்களை தவிர்த்து 4,600க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
“முதலாம் கட்டஅகழாய்வில் 3,254 பொருள்கள் கிடைத்தன. இரண்டாம் கட்ட அகழாய்வில் கூடுதலாக 1,400க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன,” என்றார் பொன் பாஸ்கர்.

