ஊரப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊரப்பாக்கத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவர்கள் ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப் பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்த ரயில் வருவதற்குள் தண்டவாளத்தைக் கடந்துவிட வேண்டும் என்று முந்தியடித்துக்கொண்டு வேகமாக ஓடிய சிறுவர்கள் ரயிலில் அடிபட்டு தூக்கியெறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்தச் சிறுவர்கள் கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (12), சுரேஷ் (15), மஞ்சுநாதன் (11) ஆகியோர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தச் சிறுவர்கள் தண்டவாளம் அருகே விளையாடிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
சென்னைக் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக வந்த மின்சார ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவர்கள் மீது மோதித்தள்ளியது.
பலியான ரவி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் என்பது காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

