சென்னை: திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரித்தாளும் கொள்கைகளுக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் என்று பேசினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கு தமிழ் ஆர்வலர்களும் தமிழ்த் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆளுநரின் பேச்சு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“எவ்வித ஆதாரமுமின்றி இப்படிப் பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
“இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது. அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார்.
“கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என் பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந்தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
“ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக, மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதோடு, தமிழகத்தின் பண்பாடு, வரலாறு, நம் தாய் மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார்.
“சமசுகிருதத்தை முன்வைத்து தமிழைப் பின்னுக்குத் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக் குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். அவ்வப்போது திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசும் ஆளுநர், தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு, திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி அரசியல்வாதியாக, ஏன் பாஜகவின் தலைவராகவோ, ஆர்எஸ்எஸ்-ன் தலைவராக ஆகட்டும்” என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ் நாடு சட்டமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும் ராபர்ட் கால்டு வெல் குறித்து ஆளுநர் ரவி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பு இந்தியாவின் தொன்மையான, சிறப்பான மொழி சமஸ்கிருதம் என்றும், தமிழ்மொழி உட்பட அனைத்து மொழிகளும் அந்த மொழியில் இருந்துதான் தோன்றின என்றும் இந்தியாவில் ஒரு மாயை நிலவியது.
“மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பல மொழிகளை ஆராய்ந்து, சமசுகிருதத்திற்கு முன்பிருந்த மொழி தமிழ்மொழி என்றறிந்து, அதன் தொன்மையையும் சிறப்பையும் ஆய்வின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியவர். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் பிற நாட்டினருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று கூறி முதன்முதலில் அச்சில் ஏற்றியவர். தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகம் குறித்தும் வெளியிட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்.
“சமசுகிருதத்தின் முக மூடியை கிழித்து, தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்துப் பேசுவது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும். ஆளுநர் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் எவர் நல்லது செய்தாலும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கொச்சைப்படுத்தும் வகையில் பேசுகிறார்,” என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

